Monday, 15 August 2011

கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்...!

கிருஷ்ணன் அல்லது கண்ணன் இருக்கானே இந்த பயபுள்ள வளரவே மாட்டேங்கிறாங்க. நான் சின்ன வயசுல இருந்தே பாத்துட்டு இருக்கேங்க சீடை முறுக்கு அதிரசம்னு கேட்டு வாங்கித் திம்பான். இன்னமும் அப்படியே இருக்கான் இவன். ஏன் வளரல? என்ன காரணம் ? எத்தனை வீட்டில நல்ல சாப்பாடு போட்டும் அப்படியே சின்ன புள்ளையா விளையாட்டுத் தனமாவே இருக்கானே ?

ஆனாலும் விளையாட்டுப் பிள்ளைன்னு சும்மா விட முடியாதுங்க. அப்படி நினைச்ச கோபியரே திகைச்சுப் போற மாதிரி ஒரு காரியம் பண்ணவன் இவன்

" காலினில் சலங்கைக் கொஞ்ச
கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசைய தெரு
வாசலில் வந்தான் "

இப்படி வந்த எந்தக் குழந்தை வந்தாலும் நீங்க என்ன பண்ணுவீங்க ? செல்லங் கொஞ்சி வாரி அணைச்சு முத்தம் குடுப்பீங்க தானே. அதைத் தான் அங்கிருந்த கோபிகள் செஞ்சாங்களாம். உடனே இவன் என்ன பண்ணான் பாருங்க

" பாலன் என்று தாவி அணைத்தேன்
அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில்
முத்தமிட்டாண்டி "

என்ன வில்லத்தனம் பாத்தீங்களா ? அது மட்டும் இல்லையாம் அவன் குழந்தையே இல்லையாம்.

" பாலனல்லடி உன் மகன்
ஜாலமிக செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்க சொல்ல
நாணம் மிக ஆச்சுதடி "

இப்படி எல்லாம் நிறைய பேர் கம்ப்ளெயிண்ட் குடுக்கிறாங்க யசோதா கிட்ட. என்ன சொல்றது அம்மா அவனை சரியா வளக்கல போல. அதனால தாங்க தெருவில இவன் தொல்லை அதிகம். பசங்க கூட விளையாடிட்டே இருப்பானாம். சட்டுன்னு யாராவது ஒரு பெண் பிள்ளையோட பின்னலை பின்னாடி இழுத்துட்டு ஓடி மறைஞ்சுக்குவானாம். பாவம் அந்தப் புள்ள பேந்தப் பேந்த முழிக்கும். பசங்க எல்லாம் இருக்கிற இடத்துக்கு பழங்கொண்டு வந்தா பகிர்ந்து சாப்டனுமா இல்லையா ? இவன் ஒரு கோட்டிக் காரங்க. குடுக்கற மாதிரி குடுத்து பாதில கைல இருந்து புடுங்கிக்குவான். அவன் கிட்ட நின்னு கெஞ்சனும். அப்பத்தான் குடுப்பானாம். அதுவும் அப்படியே இல்லை.

" என்னப்பன் என்னய்யன் என்றால்
அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான் "

இப்படி எல்லாம் பண்ணலாங்களா ? தப்பில்லைங்களா... இதெல்லாம் கேட்க யாருமே இல்லையா ?. ஆனா இதெல்லாம் இப்படி செஞ்சிட்டு இருந்தவனுக்குத்தான் ஒருத்தி தூதனுப்பறா.

" கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம் "

அப்படின்னு கெஞ்சறா. தோழி கிட்ட எதுக்கு கெஞ்சனும் ? ஏன்னா தோழிக்கும் கண்ணனைக் கண்டா பயம். அவன் கண்ணை பாத்தா பயம். அவன் கண்ணை பார்த்து மயங்காதவங்களே இல்லையே. தன் பெண்டாட்டியை விட பேரழகி யாருமில்லைன்னு நின்ன தனுர் தாசனையே கட்டிப் போட்ட கண்களாச்சே அது. அதனாலத்தான் தோழி கெஞ்சுறா. என் தங்கமில்ல என் செல்லமில்ல. போயிட்டு நான் சொல்ற மாதிரி சொல்லிட்டு ஓடி வந்துடுங்கறா.

" எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதோனும் செய்வோமடி தங்கமே தங்கம் "

ஆனா அவன் தெரியல அது இதுன்னு வம்பு பண்ணான்னு வச்சுக்கோ, ஆற்றங்கரையில என் கிட்ட பேசினதெல்லாம் அப்படியே மனசுல இருக்கு. டமாரம் கொட்டி ஊரெல்லாம் சொல்லி அவனைத் தூற்ற வைப்பேன்னு சொல்லு. நான் வீர மறக்குலத்துப் பெண் நான் கோபியர்கள் மாதிரி இல்லை அவனோட சூழ்ச்சி என் கிட்ட பலிக்காதுன்னு சொல்லுங்கறா.

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

ஆஹா ஆஹா :) நாயகி பாவத்தில் வரும் பாடல்கள் நாயகனை இறைஞ்சுவதைப் போலத்தானே எல்லாரும் எழுதனும். ஆனா பாரதியார் என்னைக்கு இறைஞ்சுதலை விரும்பி இருக்கார். வீரச்சுதந்திரம் வேண்டியவராச்சே. அதுமட்டுமா என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் அப்படின்னு தன் பெண் குழந்தையை போற்றியவராச்சே. ஆஹ அவர் வந்து கண்ணனே ஆனாலும் கெஞ்ச விடுவாரா ? கண்ணன் என் காதலனே ஆனாலும்னு ? அடுத்து என்ன சொல்றார் பாருங்க


சரி இதெல்லாம் சொல்லியும் அவன் கேக்கலைன்னா ? என்ன செய்யறதுன்னு யோசிக்கிறியா ? என்ன செய்யறது? பெண்ணாக பிறந்ததே பிழையாய்டுச்ச்சே அதுவும் அவன் ஊதும் குழல் கேட்டு அவன் மேல பித்தாகி கிடைக்கிறேனே... அந்தப் பாவியையே மனசு நினைச்சு மயங்குது. ஆகறது ஆகட்டும் சொல்ல வேண்டியதை சொல்லிடு. அப்புறம் தெய்வம் அப்படின்னு ஒண்ணு இருக்கு. மிச்சமெலாம் அந்த தெய்வம் பாத்துக்கும்

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!

இந்தப் பாடலை திருமதி ஜானகி அம்மாளின் குரலில் கேட்க கேட்க ... என்ன ஒரு இனிமை. கேட்டு மகிழுங்கள்.

சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.

No comments:

Post a Comment